சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:45 AM IST (Updated: 19 Dec 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் உள்ள சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் இருந்த நடைபாதை கடைகளை போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.

தொடர்ந்து, அதே பகுதியில் சில காய்கறி கடைகள், பழக்கடைகளின் வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகளையும் போலீசார் அகற்றினார்கள்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் சில வியாபாரிகள் கடைகள் அமைத்து சாலையோரத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று போலீசார் முயன்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை நாங்களே முன்வந்து அகற்றுவதற்கு காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து போலீசார், 3 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story