பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் மனு


பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில், கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:30 AM IST (Updated: 19 Dec 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லை அடுத்த காமாட்சிபுரத்தில் பள்ளிக்கூடம் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில், கிராமமக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டுக்கல் அருகேயுள்ள எஸ்.காமாட்சிபுரம் கிராம மக்கள் மதுக்கடை திறப்பதை எதிர்த்தும், திறந்தால் மறியல் செய்வோம் என்றும் கூறி மனு கொடுத்தனர்.

இதுபற்றி கிராமமக்கள் கூறுகையில், எஸ்.காமாட்சிபுரத்தில் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து ராமையன்பட்டிக்கு செல்லும் பாதையில் அரசு மதுபானக்கடை திறக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மதுக்கடை அமைக்கப்படும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் திண்டுக்கல்–பழனி சாலை மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது.

இந்த பாதை வழியாக தான் 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்று வருகிறோம். மேலும் 3 கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் அந்த வழியாக செல்ல வேண்டும். இங்கு மதுக்கடையை திறந்தால் பெண்கள், மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே, மதுக்கடையை திறக்கக் கூடாது. மதுக்கடை திறந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் மாங்கரை ஊராட்சி நடுப்பட்டியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 2 ஆயிரம் பேர் வசிக்கிறோம். நடுப்பட்டியில் 9 தெருக்களில் சாலை, சாக்கடை வசதி உள்ளது. ஒரே ஒரு தெரு மட்டும் குறுகலாக இருப்பதாக கூறி சாலை, சாக்கடை வசதி செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் 6 அடி அகல நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர்.

ஆனால், 2 பேர் தெருவை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாலை அமைக்கப்படாமல் இருக்கிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்துதரவேண்டும். பெண்கள் கழிப்பிடத்துக்கு மின்சார இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.

அதேபோல் செந்துறை அருகே சித்தரை கவுண்டன்பட்டியில் விவசாய நிலத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக செல்வராஜ் என்பவர் மனு கொடுத்தார்.

வேடசந்தூர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் தியாகி என்.கிருஷ்ணசாமி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு நகலுடன் வந்து தியாகிகளுக்கான உதவித்தொகை வழங்கும்படி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று கோவை மத்திய சிறையில் இருந்தேன். இதற்காக தியாகி மாயாண்டி பாரதி, லட்சுமணன், பெரியசாமி ஆகியோர் சான்றளித்து உள்ளனர். எனக்கு தியாகிகளுக்கான உதவித்தொகை கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளேன். எனது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதில் எனக்கு 3 வாரத்துக்குள் உதவித்தொகை வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது எனக்கு 94 வயதாவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு விரைவாக உதவித்தொகை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று கூறியிருந்தார்.


Next Story