சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சவுதிஅரேபியாவில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் பகுதியை சேர்ந்த கங்கய்யா எட்டலா(வயது 31) என்பவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவர் 2 தங்க கட்டிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். எட்டலா தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து இலங்கை வழியாக துபாய்க்கு விமானம் செல்ல இருந்தது. இதில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சமிமுல்லா(23) என்பவர் சுற்றுலா விசாவில் செல்ல வந்திருந்தார். அவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசில் துணிகளுக்கு இடையே ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சவுதி அரேபிய கரன்சியான ரியால் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள் முகமது சமிமுல்லா விமான பயணத்தை ரத்து செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.