ஊதிய உயர்வு வழங்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த துப்புரவு பணியாளர்கள்


ஊதிய உயர்வு வழங்க கோரி வாயில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த துப்புரவு பணியாளர்கள்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்கக்கோரி துப்புரவு மற்றும் குடிநீர் தொட்டி இயக்கும் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூரில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க மாநில தலைவர் ராமர் தலைமையில் பணியாளர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கிழக்கு பக்கம் உள்ள வாசல் வழியாக மனு கொடுக்க செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்தனர்.

இது குறித்து ராமர் கூறும்போது, மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.23 ஆயிரத்து 550 நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், 7–வது ஊதிய குழுவின்படி ரூ.4 ஆயிரத்து 540 ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வாயில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்தோம் என்றார்.

அதேபோல் என்.எல்.சி.க்கு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், குறைகேட்பு கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் முட்டிப்போட்டு பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து, இங்கே போராட்டம் நடத்த அனுமதியில்லை. பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள் என தெரிவித்தனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், என்.எல்.சி.க்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்கள் என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 31.7.2016 முதல் எங்களுக்கு வேலை தரவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் தேவா என்கிற காமதேவன் தலைமையில் நிர்வாகிகள் பசு மாட்டுடன் கலெக்ரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு பாதையில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார், பசுமாட்டுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை தடுத்தனர்.

பின்னர் அவர்கள் பசுமாட்டை அங்கேயே விட்டு விட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருவதிகை விரட்டானேஸ்வரர் கோவில் தேர் வெயிலிலும், மழையிலும் சேதம் அடைகிறது. எனவே அந்த தேரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு கூடாரம் அமைக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள், தரிசு நிலங்கள், கடைகள், சாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், கோ சாலையில் மாயமான பசுமாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தன.

கடலூர் மஞ்சக்குப்பம் வ.உ.சி. இளைஞர் நற்பணி இயக்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரர் கோவில் குளத்தில் கழிவுநீர், ஆலைக்கழிவுகள் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கோவில் குளத்தை பராமரித்து தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story