கும்மிடிப்பூண்டி: கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்கப்படுமா?
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி ரெயில்வே கேட் உள்ளது. இது கும்மிடிப்பூண்டி சிப்காட், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி.நகர், புதுகும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே கேட் ஆகும்.
ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏற்படும் நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு இந்த ரெயில்வே கேட் பல வருடங்களுக்கு முன்பே நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. இருப்பினும் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்துதான் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் மூலமும், நடந்தும் மறுபுறம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சில சமயங்களில் சவ ஊர்வலங்களையும் ரெயில்வே கேட்டில் குனிந்து எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே இந்த ரெயில்வே கேட்டின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது கும்மிடிப்பூண்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதையடுத்து மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்க இயலாத நிலையில் அதன் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைத்திட ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.
இத்தகைய சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் தடைஇன்றி செல்ல 37 மீட்டர் நீளம், 16 அடி அகலம் மற்றும் 10 அடி உயரத்துக்கு வழி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
சுரங்கப்பாதை அமைப்பதற்காக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக ரெயில்வே கேட்டின் அருகே சுரங்கப்பாதை அமைத்திட தேவையான கான்கிரீட்டாலான ‘ரெடிமேட்’ பாலத்துண்டுகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் நிர்வாக பிரச்சினை காரணமாக சுரங்கப்பாதை தொடர்பான அடுத்த கட்ட பணிகள் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
சுரங்கப்பாதைக்கான பணிகளை ரெயில்வே துறையினர் இதுவரை தொடங்காததால் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரெயில்வே கேட்டையும் நிரந்தரமாக மூடிவிட்டு, சுரங்கப்பாதை பணிகளையும் கிடப்பில் போட்டு விட்டு பொதுமக்களை நாள்தோறும் கஷ்டப்படுத்தி வரும் ரெயில்வே நிர்வாகம், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.