குஜராத், இமாசல பிரதேசம் தேர்தலில் வெற்றி: பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
குஜராத், இமாசல பிரதேசம் சட்டமன்ற தேர்தல் வெற்றியை புதுவை மாநில பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் சென்று கொண்டாடினர். ஊர்வலத்தை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
குஜராத், இமாசல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதனை கொண்டாடும் விதமாக புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
லாஸ்பேட்டை நேதாஜி சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அஜந்தா சந்திப்பு, அண்ணாசாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே வந்தது. அப்போது அங்கிருந்து பா.ஜ.க.வினர் நேரு வீதி வழியே செல்ல முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் அண்ணாசாலை வழியாக ஊர்வலத்தை தொடர்ந்தனர். அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை வழியாக சென்று சாரத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பா.ஜ.க. கொடியை கட்டி இருந்தனர்.