சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்


சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:45 AM IST (Updated: 19 Dec 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்க முடியாது என்று கவர்னர் கிரண்பெடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை பிரபல தாதாவான தட்டாஞ்சாவடி செந்தில் மீது நில அபகரிப்பு புகார்கள் எழுந்ததால் அவர் அபகரித்ததாக கூறப்படும் இடத்தில் கவர்னர் கிரண்பெடி அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அபகரிப்பு நிலங்களில் வேலி போட்டு பூட்டு போட்டு இருப்பதை கண்டு அவற்றை திறந்து பொதுமக்களை அனுமதித்தார்.

கவர்னரிடம் நிலத்தின் சொந்தக்காரர்கள் தங்களது புகார்களை தெரிவித்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:–

புதுவை கவர்னர் மாளிகை சார்பில் கடந்த 17 மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. பொதுமக்களின் புகார்கள் அனைத்திற்கும் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நில ஆக்கிரமிப்பு புகார்களை கவர்னர் மாளிகைக்கு தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவுவதற்கும், மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் கவர்னர் மாளிகை தயாராக உள்ளது.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.


Next Story