பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பாட்டி-பேத்தி பலி மேலும் 11 பேர் படுகாயம்


பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பாட்டி-பேத்தி பலி மேலும் 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:30 AM IST (Updated: 19 Dec 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் பாட்டி-பேத்தி பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 44). டெய்லர். இவருடைய மனைவி சபுராபீவி (41). இவர்களுடைய மகன் அபுபக்கர் சித்திக்(18). இவர் சென்னையிலுள்ள அரேபிய பாடசாலையில் படித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காகவும், அங்கு நடந்த பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் பங்கேற்கவும் அக்பர்அலி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறைரோடு பகுதியை சேர்ந்த சல்மான்பாரூக் (32) ஆகியோருடன் ஆம்னி வேன் ஒன்றில் சென்னை சென்றார். பின்னர் அங்கிருந்து அதே வேனில் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை சல்மான்பாரூக் ஓட்டினார். அவரையும் சேர்த்து மொத்தம் 13 பேர் வேனில் பயணம் செய்தனர்.

நேற்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல் அருகே வந்தபோது, வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதனால் அதிலிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு வெளியேவர முடியாமல் அய்யோ... அம்மா... என அலறினார்கள்.

இந்த விபத்தில் சபுராபீவியும், ஜாபர்அலி-ஜாஸ்மின் தம்பதியரின் 5 மாத குழந்தை அலிமாசஹதியாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜாஸ்மின், சபுராபீவியின் மகள் ஆவார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சபுராபீவி, கைக்குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அக்பர்அலி, அவரது மகன் ரகுமத்துல்லா (16), அப்துல் அஜீஸ் (7), ஜாஸ்மின் (22), ஆயிஷாபீவி (52), நஷ்ரியாபேகம் (72) மற்றும் சல்மான்பாரூக், அவரது மனைவி பர்வீன்பானு (25), அவர்களது மகன் உசேன்அகமது (2) உள்பட 11 பேர் படு காயமடைந்தனர். இதில் பர்வீன்பானு, உசேன்அகமது, ரகுமத்துல்லா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பாட்டியும், பேத்தியும் பலியானது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story