வரதராஜபெருமாள் கோவிலில் இருந்த சாமி சிலைகள் மீட்பு


வரதராஜபெருமாள் கோவிலில் இருந்த சாமி சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே வரதராஜபெருமாள் கோவிலில் இருந்த உலோக சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி உடையார் தெருவில் பழமையான வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. பாழடைந்த நிலையில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் சிதலமடைந்துவிட்டதால் கோவிலின் அருகே ஒரு கீற்று கொட்டகையில் மூலவர் வரதராஜபெருமாளின் கற்சிலை மட்டும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வரதராஜபெருமாள் கோவிலில் இருந்த 3 உலோக சிலைகள் மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதே பகுதியில் உள்ள செல்லி அம்மன் கோவிலில் பாதுகாப்பு காரணம் கருதி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நல்லத்துக்குடியை சேர்ந்த இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வரதராஜபெருமாள் கோவிலில் வைத்து வழிபட்டு வந்த உலோக சாமி சிலைகளை காணவில்லை என்றும், அதனை மீட்டு கோவிலில் வழிபாட்டுக்கு வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுவுக்கு புகார் மனு அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் உத்தரவின்பேரில் நேற்று இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் உத்திராபதி, மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் இளம்பரிதி, நல்லத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன் ஆகியோர் நல்லத்துக்குடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள செல்லி அம்மன் கோவிலில் பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த 3 உலோக உற்சவ சாமி சிலைகளை மீட்டனர். இதில் பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள மகாவிஷ்ணு சிலை 28 கிலோ எடையும், 57 செ.மீட்டர் உயரமும், நின்ற நிலையில் இருந்த மகாவிஷ்ணு சிலை 10 கிலோ எடையும் 53 செ.மீட்டர் உயரமும், நின்ற நிலையில் உள்ள வரதராஜபெருமாள் 14 கிலோ எடையும் 51 செ.மீட்ட உயரமும் இருந்தது. பின்னர் அந்த சாமி சிலைகளை சுத்தம் செய்து மாலை அணிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட சிலைகளின் விவரங்களை ஒரு பதிவேட்டில் குறிப்பு எடுத்து நல்லத்துக்குடியை சேர்ந்த புகார் மனு அனுப்பிய செந்தில்குமார் தரப்பினரிடமும், சிலைகளை பாதுகாத்து வைத்து இருந்த நல்லத்துக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீதாராணி காமராஜ் தரப்பினரிடமும் அரசு அலுவலர்கள் கையெழுத்து பெற்றனர். பின்னர் அதிகாரிகள் 3 சாமி சிலைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரெங்கநாதர் கோவில் அருகில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். 

Next Story