மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

டேனிஷ்பேட்டையில் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு போனது.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த டேனிஷ்பேட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக மாதையன் என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வந்திருந்து பூஜை செய்தனர். அப்போது பக்தர்கள் வேண்டுதலுக்காக கோவிலில் சாமியின் மடியில் பணம் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் இரவு 9 மணியளவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை பூசாரி மாதையன் கோவிலை திறக்கசென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலையும், மாரியம்மனின் கழுத்தில் கிடந்த அரைபவுன் தங்கத்தாலியையும், அம்மன் மடியில் பக்தர்கள் வேண்டுதலுக்காக வைத்த பணத்தையும் காணவில்லை. யாரோ மர்மமனிதர்கள் இவற்றை திருடி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி மாதையன் இதுகுறித்து ஊர்கவுண்டர் சின்னுவிடம் தகவல் தெரிவித்தார். அதையொட்டி ஊர்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர். அப்போது கோவில் அருகில் உடைந்த பூட்டு கிடந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறிது தூரம் சென்று தேடியபோது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை பொதுமக்கள் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படவில்லை. எனவே உண்டியலில் சுமார் ரூ.25 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து ஊர்கவுண்டர் சின்னு தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Next Story