மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி பரோல் கேட்ட குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி


மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி பரோல் கேட்ட குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 19 Dec 2017 4:45 AM IST (Updated: 19 Dec 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி பரோல்கேட்ட, குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியின் பரோல் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மும்பை, 

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சுமார் 1,000 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் முசாமில் கட்ரி. இவர் ராய்காட் மாவட்டம் மாசாலா பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பரோல் கேட்டு சிறைத்துறையிடம் விண்ணப்பித்தார்.

அவரது மனுவை சிறைத்துறை நிராகரித்தது. இதையடுத்து அவர் தனக்கு பரோல் வழங்க உத்தரவிடுமாறு மும்பை ஐகோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் மனு தாக்கல் செய்தார்.

போலி மருத்துவ சான்றிதழ்

அந்த மனுவில் அவர், தனது மனைவிக்கு மார்பில் கட்டி உள்ளது. அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அப்போது மனைவியை கவனித்து கொள்ள தனக்கு பரோல் வழங்குமாறு கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஆஜரான அரசு வக்கீல், பரோல் பெற முசாமில் கட்ரி தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என பொய்யான தகவலை கோர்ட்டில் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் முசாமில் கட்ரி மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என தாக்கல் செய்த மருத்துவ சான்றிதழ்கள் போலியானவை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி முசாமில் கட்ரியின் பரோல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story