நொறுக்குதீனி கடை தீ விபத்தில் 12 பேர் கருகி பலி: பார்வையற்ற பெண் கூச்சலிட்டதால், சிலர் உயிர் தப்பினர்


நொறுக்குதீனி கடை தீ விபத்தில் 12 பேர் கருகி பலி: பார்வையற்ற பெண் கூச்சலிட்டதால், சிலர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 19 Dec 2017 5:00 AM IST (Updated: 19 Dec 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

சாக்கிநாக்கா நொறுக்குதீனி கடை எதிரே வசித்து வரும் பார்வையற்ற பெண், சரியான நேரத்தில் தனது மகனை எழுப்பியதால், சிலர் உயிர் தப்பினர்.

மும்பை,

மும்பை சாக்கி நாக்கா பகுதியில் உள்ள நொறுக்குதீனி கடையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், கடையில் இருந்த 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார் கள். மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவத்தை நேரில் பார்த்த துஷார் பவார் (வயது 27) என்பவர் கூறியதாவது:-

நொறுக்குதீனி கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். அதிகாலை 4 மணியளவில் அந்த கடையில் இருந்து உரத்த சத்தம் எழும்பியதை கண் பார்வையற்ற என் தாயார் கேட்டார். ‘கடைக்குள் திருடர்கள் புகுந்துவிட்டார்களோ’ என்ற சந்தேகத்தில், தூங்கிக்கொண்டிருந்த என்னை அவர் தட்டி எழுப்பினார்.

வெடிச்சத்தம்

உடனடியாக நான் பதறியடித்து கொண்டு வெளியே வந்தேன். அப்போது, கடைக்குள் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால், கடைக்குள் தீப்பிடித்து எரிந்ததை அறிந்ததும், நாங்கள் கத்திக்கூச்சலிட்டோம். உடனடியாக எங்கள் பகுதியை சேர்ந்த 6 பேர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். நாங்கள் அனைவரும் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றோம்.

ஆனால், நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதால், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தெரியப்படுத்தினோம். கண் பார்வையற்ற என்னுடைய தாயார், சரியான நேரத்தில் என்னை எழுப்பியதால், ஒரு சிலரை தீயணைப்பு படையினரால் உயிருடன் மீட்க முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story