ஆர்.கே.நகரில், அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது சரத்குமார் பேட்டி
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14–ந் தேதி கிரிப்பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், திருச்செந்தூரைச் சேர்ந்த பேச்சியம்மாள் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இடிந்த கிரிப்பிரகார மண்டபத்தை நேற்று முன்தினம் இரவில் பார்வையிட்டார். பின்னர் அவர், பேச்சியம்மாளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும் அவர் பேச்சியம்மாளின் மகள் சுமதி, மகன் சுரேஷ் ஆகியோரின் படிப்பு செலவினை ஏற்பதாக கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டேன். புயலால் மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளை கேட்டறிந்தேன். ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிரிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்தபோது தெய்வாதீனமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பழுதடைந்த மண்டபத்தை முழுவதுமாக அகற்றி விட்டு புதிய மண்டபம் கட்ட வேண்டும்.
மதுரவாயல் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக உயிரை பற்றி கவலைப்படாமல் ராஜஸ்தான் மாநிலம் சென்ற தனிப்படை போலீசாரை பாராட்டுகிறேன். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை நடக்கிறது. முழுமையான விவரம் தெரியாமல் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவு செய்ய கூடாது.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. அங்கு ஏற்கனவே நடைபெற இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு வாக்காளர்களுக்கு மீண்டும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறுகின்றனர். இது தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை சரியாக நடத்தவில்லையா? என மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.
பொதுவாக சட்டமன்ற உறுப்பினர் இறந்தால் இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் 8 மாதத்துக்கு ஒருமுறை மீண்டும், மீண்டும் இடைத்தேர்தல் ஏற்பாடு செய்வது சிரமம். எனவே ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடத்த வேண்டும். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து உள்ளதால், அந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்படும்.
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் பயணித்து விட்டோம். தற்போது சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை மக்களிடம் நேரடியாக சுயமாக சொல்வதற்காக நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். எங்களது கட்சியின் வளர்ச்சிக்காகவும், பலத்தை அறியவும் நேரடியாக பயணம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர்கள் தயாளன்(தெற்கு), வில்சன்(வடக்கு), ஒன்றிய செயலாளர் சோடா ரவி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குருசு திவாகர், நகர செயலாளர்கள் ராமச்சந்திரன், சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.