தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், மிளகாய், மக்காச்சோளம் பயிர்களுக்கு காப்பீடு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 2016–17–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும். 2015–16–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். மிளகாய், மக்காச்சோளம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகை செலுத்தியும், அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே அதற்கான இழப்பீடு தொகையையும் விரைவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் ரகுநாதன், நம்பிராஜன், சங்கரன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.