கொரட்டூரில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
கொரட்டூரில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார்? அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அம்பத்தூர்,
சென்னை கொரட்டூர் 200 அடி சாலையில் உள்ள கேனால் ரோட்டில் சுமார் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி கடந்த 8 வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி உள்ள ஒதுக்குபுறமான பகுதியில் நேற்று காலை உடலில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் கிடந்தது.
அந்த வழியாக சென்ற கட்டிட தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கை, கால்கள் மற்றும் மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய முகம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைக்கபட்டு இருந்தது.
போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அந்த மோப்ப நாய் அருகில் உள்ள ஏரிக்கரை வரை ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலை செய்யப்பட்ட வாலிபர் கோடு போட்ட முழுக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.
இது அதிக ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குபுறமான இடம் என்பதை நன்கு அறிந்த மர்ம நபர்கள் யாரோ, திட்டமிட்டு வாலிபரை இங்கு அழைத்து வந்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அவருடைய உடலை இங்கேயே போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.