ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பம்ப் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் போராட்டம்
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பம்ப் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஊட்டி,
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஊராட்சி பம்ப் ஆபரேட்டர், உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்க பொதுச்செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் போஜராஜன், கட்டுமான சங்க செயலாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர். இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பம்ப் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள், சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் போஜராஜன் கூறியதாவது:–
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 கிராம ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதார பணிக்கு பம்ப் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 220 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உயர்த்தி உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு உத்தரவின்படி, பம்ப் ஆபரேட்டர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு குழு காப்பீட்டு தொகை ரூ.60 பிடித்தம் செய்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
கடநாடு ஊராட்சியில் பணியின் போது உயிரிழந்த சுகாதார பணியாளர் பகவதியின் குடும்ப வாரிசுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். பம்ப் ஆபரேட்டர், சுகாதார பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்சமாக காலமுறை ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு படி மற்றும் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் கூறும்போது, பம்ப் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தகுதி உள்ள பம்ப் ஆபரேட்டர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தொகையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.