என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிபதி முன்பு யுவராஜ் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு


என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிபதி முன்பு யுவராஜ் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் கோர்ட்டில் நீதிபதி முன்பு யுவராஜ் ஆவேசமாக பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இவர்களில் 15 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். யுவராஜ் வேலூர் சிறையிலும், அவரது கார் டிரைவர் அருண் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து போலீசார், யுவராஜை வேலூரில் இருந்து அழைத்து வந்து நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். மேலும் யுவராஜின் கார் டிரைவர் அருண், இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள 12 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது நீதிபதி இளவழகன் வழக்கின் விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என அறிவித்தார். மேலும் யுவராஜ் மற்றும் அவரது கார் டிரைவர் அருண் ஆகியோரின் நீதிமன்ற காவலும் இன்று (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட யுவராஜ், நீதிபதியிடம், இந்த வழக்கு தொடர்பாக 5 நிமிடம் பேசவேண்டும் என்றார். இதற்கு நீதிபதி அனுமதி மறுத்து, இப்போது பேசமுடியாது என்றார். உடனடியாக யுவராஜ் எனக்கு தூக்கு தண்டனை அளித்த பிறகுதான் என்னை பேச அனுமதிப்பீர்களா? என ஆவேசமாக பேசி, நீதிபதியுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் இருவரை நீதிபதி சாட்சி கூண்டுக்கு அழைத்து கோர்ட்டில் என்ன நடந்தது, யுவராஜ் என்ன கூறினார் என்பதை விசாரித்தார். இருவரும் யுவராஜ் பேசியதை தெரிவித்தனர். அதை நீதிபதி பதிவு செய்தார். இதைதொடர்ந்து யுவராஜை அழைத்து செல்லும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story