ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்காததை கண்டித்து மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கடையடைப்பு


ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்காததை கண்டித்து மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கடையடைப்பு
x
தினத்தந்தி 20 Dec 2017 3:30 AM IST (Updated: 20 Dec 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்காததை கண்டித்து மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும், கோவைக்கு பயணிகள் ரெயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் காரமடை வழியாக சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே ரெயில்வே கேட் உள்ளது.

இங்கு ரெயில்கள் வரும்போது ரெயில்வே கேட் மூடப்படுவதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் காரமடையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து ரெயில்வே திட்ட பணிகள் 2011–2012–ம் ஆண்டுகளின் கீழ் ரூ.33 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 26–2–2015–ம் ஆண்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

இந்த பணி ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும். நில ஆர்ஜிதம் உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்காததை கண்டித்து மேட்டுப்பாளையம் தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பா.ஜனதா கட்சியினர் காரமடை கார் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கோட்ட அமைப்பு செயலாளர் டி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் வி.பி.ஜெகநாதன், மாவட்ட செயலாளர் ஜி.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில விவசாய அணி துணைத்தலைவர் ஜி.கே.நாகராஜ், ஒன்றிய தலைவர் செந்தில்குமார் நகர தலைவர் விக்னேஷ், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் ஏ.எஸ்.செந்தில்குமார், ஆனந்தகுமார், பிரபு, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கீதா, மாவட்ட தலைவர் ஹேமா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story