சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடும் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வுக்கு, காங்கிரசில் சேரும்படி மிரட்டல்
எங்கள் கட்சி சார்பில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடும் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வை சிலர் காங்கிரசில் சேரும்படி கூறி மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என்று குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
பெங்களூரு,
எங்கள் கட்சி சார்பில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடும் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வை சிலர் காங்கிரசில் சேரும்படி கூறி மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என்று குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சிறையில் தள்ளுவதாக...எங்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவேகவுடா போட்டியிடுகிறார். அதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார். தோல்வி பயத்தால் எங்கள் கட்சி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவை மிரட்டும் பணியில் சித்தராமையா இறங்கி இருக்கிறார்.
வீட்டு வசதித்துறை முறைகேடு தொடர்பான பழைய வழக்கை தூசிதட்டி எடுத்து ஜி.டி.தேவேகவுடா மீது ஊழல் தடுப்பு படையில் நில முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. காங்கிரசில் சேரும்படி ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வை சிலர் மிரட்டுகிறார்கள். இல்லாவிட்டால் இந்த அவரை சிறையில் தள்ளுவதாக கூறுகிறார்கள்.
பொய் வழக்குகளை போடுகிறதுமத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகளை போடுகிறது. அதே போல் கர்நாடக காங்கிரஸ் அரசு இங்குள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது வழக்குகளை போடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது எங்கள் கட்சி வேட்பாளரை மிரட்டும் செயல் ஆகும். ஊழல் தடுப்பு படையை மாநில அரசு தவறாக பயன்படுத்துகிறது.
போலீஸ் அதிகாரிகள் மூலம் மிரட்டும் பணியில் சித்தராமையா இறங்கியுள்ளார். சித்தராமையாவுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே ஆட்சி அதிகாரம் இருக்கிறது. கல்வித்துறையில் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்து இருப்பதாக அதிகாரி ஒருவரே கடிதம் எழுதியுள்ளார்.
நான் பயப்பட மாட்டேன்கனகபுராவில் பால் கூட்டமைப்பு பண்ணையை அமைக்க விலை குறைந்த நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதுபோன்று இன்னும் பல முறைகேடுகளை இந்த அரசு செய்துள்ளது. போலீஸ் அதிகாரிகளின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். வீட்டு வசதித்துறையில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று கடந்த 2011–ம் ஆண்டே அறிக்கை வழங்கினர்.
என்னவோ தெரியவில்லை, இப்போது அந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த அரசு என்ன செய்து கொண்டிருந்தது?. ஜந்தகல் கனிம முறைகேடு வழக்கில் எனது பெயர் முன்பு இருக்கவில்லை. இப்போது அந்த வழக்கில் என் பெயரை சேர்த்துள்ளனர். சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டாலும் சரி, வருணா தொகுதியில் களத்தில் இறங்கினாலும் சரி தோல்வியை சந்திப்பது உறுதி என்று கருத்து கணிப்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.
ரூ.2,000 கோடி முறைகேடுமைசூரு மினரல்ஸ் நிறுவனத்தில் இரும்பு தாது ஏற்றுமதியில் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக நான் கூறினேன். நான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எப்போதும் ஆதாரம் கொடுப்பது இல்லை என்று சித்தராமையா என்னை குறை கூறி இருக்கிறார். இதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அதை விரைவில் வெளியிடுவேன்.
நான் முதல்–மந்திரியாக இருந்தபோது ரூ.150 கோடி லஞ்சம் வாங்கியதாக என் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து சித்தராமையா விசாரணை நடத்த வேண்டியது தானே. ஜந்தகல் சுரங்க முறைகேடு தொடர்பான விசாரணை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும்? என்று மக்களுக்கே தெரியும். ஆனால் கொலை குற்றவாளி போல் 15 நாட்களுக்கு ஒரு முறை சிறப்பு விசாரணை குழு முன்பு நான் ஆஜராக வேண்டி உள்ளது. எங்களை ஜெயிலுக்கு அனுப்பினால், பின்னர் சித்தராமையாவை சிறையில் தள்ளவும் எங்களுக்கு தெரியும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.