உடுமலை அருகே மகன் கலப்பு திருமணம் செய்ததால் மகளுடன் பெற்றோர் தற்கொலை


உடுமலை அருகே மகன் கலப்பு திருமணம் செய்ததால் மகளுடன் பெற்றோர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2017 4:45 AM IST (Updated: 20 Dec 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மகன் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டதால் மனம் உடைந்த பெற்றோர் தங்கள் மகளுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

உடுமலை,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரை அடுத்த கீழாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50), விவசாயி. அவருடைய மனைவி முத்துலட்சுமி (45). இவர்களுடைய மகன் பாண்டியராஜ் (25), மகள் பானுப்பிரியா (21). திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பானுப்பிரியா விடுதியில் தங்கி எம்.எஸ்.டபிள்யூ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். பாண்டியராஜ் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பாண்டியராஜ் உடுமலையில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் எம்.காம் படித்தபோது, அவருடன் படித்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பாண்டியராஜின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் பாண்டியராஜ் தனது காதலை கைவிடவில்லை. படிப்பை முடித்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அந்த பெண்ணை சில நாட்களுக்கு முன்பு அவர் திருமணம் செய்துகொண்டார். இந்த தகவலை அறிந்த முருகன் மனமுடைந்தார்.

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை மகன் திருமணம் செய்துகொண்டதால் அவமானம் தாங்கமுடியாத முருகன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். மனைவியுடன் உடுமலைக்கு சென்ற அவர் தனது மகளிடம் நடந்த விவரத்தை கூறினார். இதையடுத்து 3 பேரும் உடுமலையை அடுத்த கொழுமம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதற்கிடையில் 3 பேர் பிணமாக கிடப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குமாரகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story