இறால் பண்ணைகளில் விஷம் ஊற்றியதாக புகார்
இறால் பண்ணைகளில் விஷம் ஊற்றியதாக வந்த புகாரின் பேரில் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது ஓபசமுத்திரம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணைகள் உள்ளன. இந்த இறால் பண்ணைகளால் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக புகார் கூறி இந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை ஏற்கனவே நடத்தி உள்ளனர். இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தின் மூலம் பேச்சுவார்த்தையும் பலமுறை நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக இறால் பண்ணை உரிமையாளர்கள் கோர்ட்டு வரை சென்றுள்ளனர்.
மேலும் இறால் பண்ணை உரிமையாளர்கள், அரசு விதிமுறைகளின்படியும், அவர்களுக்கு உரிய பட்டா நிலத்திலும் தான் இறால் பண்ணைகள் நடத்தப்படுவதாக கூறி அவை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் இறால் பண்ணைகளை தாங்களே அகற்ற முடிவு செய்த அந்த பகுதி மக்கள், கடந்த மாதம் 5–ந் தேதி மேற்கண்ட கிராமத்தில் உள்ள 6 பேருக்கு சொந்தமான 10 இறால் பண்ணைகளில் கொக்குமருந்தை (விஷம்) ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து இறால்பண்ணை உரிமையாளர்களின் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கிராமமக்கள் மீது ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக ஓபசமுத்திரம் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின் முடிவில், உரிய அனுமதியின்றி பட்டா நிலத்தில் கூட யாரும் இறால் பண்ணைகளை அமைக்கக்கூடாது. அப்படி யாராவது அரசின் அனுமதியின்றி யாராவது இறால் பண்ணைகளை அமைத்து இருந்தால் அவற்றை இந்த மாத இறுதிக்குள் அப்புறப்படுத்தி விட வேண்டும். மேலும் இனி வருங்காலங்களில் மேற்கண்ட ஓபசமுத்திரம் கிராமத்தில் யாராவது இறால் பண்ணைகளை அமைத்திட முன்வந்தால் அந்த கிராம மக்களிடையே எவ்வித ஆட்சேபனையும் வராமல் இருந்தால் மட்டுமே தாசில்தார் அலுவலகத்தில் இருந்து அதற்கான பரிந்துரை செய்யப்படும் என்கிற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.