அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி டாக்டர்கள் தீவிர சிகிச்சை


அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி டாக்டர்கள் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 20 Dec 2017 3:45 AM IST (Updated: 20 Dec 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விசாரணை கைதி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருச்சி,

அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே உள்ள மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் மோசஸ் என்கிற பாலமுருகன் (வயது 40). இவரை கடந்த 15-ந்தேதி குற்ற வழக்கு சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணை கைதியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 17-ந்தேதி அதிகாலை சிறையில் இருந்த மோசசுக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாததாலும், கால்களில் வீக்கம் இருந்ததாலும் சிறைக்காவலர்கள், அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் உள்ள கைதிகள் அறையில் போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று படுக்கையில் இருந்த மோசஸ் மேலிருந்த மின்விசிறியில் போர்வையால் தூக்கில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோசசை காப்பாற்றி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த டாக்டர்கள் மோசசை விபத்து மற்றும் உயர் மருத்துவ சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவு அறையில் சுவாசக்கருவி பொருத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசஸ் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்தும் திருச்சி நீதிபதியும் விசாரணை நடத்தி வருகிறார். மோசஸ் மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்றது குறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மருத்துவமனை கைதிகள் சிகிச்சை அறையில் மோசஸ் மட்டுமே இருந்துள்ளார். அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ்காரர்கள் அறைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story