யந்திரசனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


யந்திரசனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:00 AM IST (Updated: 20 Dec 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திர சனீஸ்வரபகவான் கோவிலில் நேற்று காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 17-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை நவக்கிரக ஹோமங்கள் நடந்தது.

நேற்று அதிகாலை 5 மணி முதல் சனீஸ்வர பிரீதி பரிகார பூஜை, தோஷ நிவர்த்தி பூஜை, சங்கல்பம், கலசம் புறப்பட்டு சாமிக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.01 மணி அளவில் சனிப்பெயர்ச்சி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீபம் ஏற்றி வழிபட்டனர்

மேலும் உற்சவர் சனீஸ்வரர் காக வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தீர்த்தக்குளத்தில் பக்தர்கள் குளித்தபின் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும் சனிப்பரிகார ஹோமங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு வரும் பக்தர் களின் வாகனங்கள் அனைத்தும் சந்தவாசல் ஆரணி ரோடு, ஏரிக்குப்பம் கூட்ரோடு பகுதியில் நிறுத்த போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் பக்தர்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது.

கார் கண்ணாடி உடைப்பு

சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக்கு வந்த வருவாய்த்துறையினர் காரையும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கார் கண்ணாடி ஒன்றும் உடைக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு ஆரணி, சந்தவாசல், போளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் சாமியை பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கட்டண வரிசை, இலவச தரிசனம் வசதி செய்யப்பட்டு இருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆர்.கார்த்திகேயன், தக்கார் ஆர்.நடராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். 

Next Story