பிளஸ் -1 மாணவி தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மர்மம் கொலையா? போலீசார் விசாரணை


பிளஸ் -1 மாணவி தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மர்மம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Dec 2017 4:45 AM IST (Updated: 20 Dec 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி வாணியம்பாடி அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,

பள்ளிகொண்டாவை அடுத்த தீச்சூர் புத்தர்நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சுவேதா (வயது 16), பள்ளிகொண்டாவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பள்ளிக்கூடம் செல்வதாக கூறிவிட்டு, சீருடையுடன் வீட்டை விட்டு புறப்பட்டார். இந்த நிலையில் வாணியம்பாடி - விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே கந்திகுப்பம் என்ற இடத்தில் தண்டவாளத்தில் தலையில் காயங்களுடன் அவர் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். சுவேதாவின் புத்தகப்பை சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி கிடந்தது. ரெயிலில் அடிபட்டாலோ அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாலோ உடல் சிதறி இருக்கும். ஆனால் தலையை தவிர அவரது உடலில் வேறு எங்கும் காயங்கள் இல்லை.

மாணவி சுவேதா பள்ளிகொண்டாவில் இருந்து எதற்காக இந்த பகுதிக்கு வந்தார்? யாராவது கடத்தி வந்து கொலை செய்து தண்டவாளத்தில் பிணத்தை வீசிவிட்டு சென்றிருப்பார்களா? அல்லது வேறு காரணம் இருக்குமா? என்பது மர்மமாக உள்ளது.

எனவே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா? என்பது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story