‘‘அரசு அதிகாரிகளுக்கே ஜி.எஸ்.டி. குறித்து தெரியவில்லை’’ விக்கிரமராஜா குற்றச்சாட்டு
அரசு அதிகாரிகளுக்கே ஜி.எஸ்.டி. குறித்து முழுமையாக தெரியவில்லை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு மண்டல தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விளக்கி பேசினர்.
பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கமளித்தனர். இதில் செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், தேனி மாவட்ட தலைவர் பி.செல்வகுமார், பழனி அடிவாரம் சங்க தலைவர் என்.செல்வகுமார், ஒட்டன்சத்திரம் வர்த்தகர் சங்க தலைவர் சுப்பிரமணியன், காய்கனி வர்த்தகர் சங்க தலைவர் தங்கவேல் உள்பட நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அந்த துறையை சேர்ந்த அதிகாரிகள், வியாபாரிகளை மிரட்டுகின்றனர். உரிமம் எடுக்கும் படியும், இல்லையென்றால் அபராதம் விதிப்பதாகவும், கடைகளுக்கு ‘சீல்’ வைப்பதாகவும் மிரட்டுகின்றனர்.
மேலும் அதிகாரிகள், வியாபாரிகளிடம் லஞ்சம் கேட்டு அரசுக்கு அவப்பெயரை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள வியாபாரிகளை திரட்டி தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அரசு அதிகாரிகளுக்கே முழுமையான விவரம் தெரியவில்லை. இதனால் அவர்களால் வியாபாரிகளுக்கும் இதுகுறித்து புரியவைக்க முடியவில்லை. இதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அரசு களைய வேண்டும். 81 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க அரசுக்கு பரிந்துரை செய்தோம். ஆனால் 51 பொருட்களுக்கு மட்டுமே வரியை குறைத்துள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக வருகிற 23–ந்தேதி டெல்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகளுக்கு அதிக அளவில் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.