தகுதி சான்றிதழ் பெற அபராத கட்டணத்தை நீக்கவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை


தகுதி சான்றிதழ் பெற அபராத கட்டணத்தை நீக்கவேண்டும் ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2017 3:45 AM IST (Updated: 20 Dec 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோக்களுக்கு தகுதி சான்றிதழ் பெற அபராதம் விதிக்கும் முறையை நீக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் சீனுவாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு சாலை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வரும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களின் வாழ்க்கையை, தொழிலை பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாக புதியசாலை போக்குவரத்து மசோதாவை அமல்படுத்த துடித்து வருகிறது. கடந்த 2016–ம் ஆண்டு ஒரு அரசாணை மூலம் அனைத்து மாநில போக்குவரத்து துறைக்கு, போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து பணிகளுக்கு பெறப்படும் கட்டணம் மற்றும் அபராத முறையை வரைமுறை இல்லாமல் கடுமையாக உயர்த்தி அரசாணை பிறப்பித்து உள்ளது.

குறிப்பாக தகுதி சான்றிதழ் பெற ரூ.300 என்பதை ரூ.600 ஆக உயர்த்தியும், எவ்வளவு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டாலும் ரூ.200 அபராதம் என்பதை ஒவ்வொரு நாளும் ரூ.50 என்றும் நிர்ணயித்துள்ளது. காலதாமத அபராத முறையால் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஆட்டோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களும் 2 சக்கர வாகன ஓட்டுநர் முதல் கனரக ஓட்டுநர் வரை லைசென்சு புதுப்பிக்க முடியாமல் அல்லல்பட்டு வந்தனர்.

தவறான விதியின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கம் தொடர் போராட்டம் நடத்தி வந்தோம். மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தோம். இதைத்தொடர்ந்து அபராத முறைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து உடனடியாக அபராத முறையை நீக்க பழைய கட்டண முறையை அமலாக்கிட புதுவை அரசும் போக்குவரத்துத்துறையும் ஆவண செய்திட வேண்டும். மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சாலை போக்குவரத்து மசோதாவினை கைவிடவேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எதிரான மத்திய அரசின் தவறான நடவடிக்கையை அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story