கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்


கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:15 AM IST (Updated: 20 Dec 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 6 மாதமாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கவில்லை. இதனால் 33 ஆயிரத்து 914 மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், பாலமுருகன், அமரேசன், தில்லைநாயகம், தனுசு உள்பட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊராட்சிகளில் வேலை வழங்காததால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருவதாகவும், ஆகவே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களால் முடிந்த வேலை வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story