நோய் தாக்கிய மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்


நோய் தாக்கிய மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம் பகுதி விவசாயிகள் நோய் தாக்கிய தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். எனவே 1 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பனப்பாக்கம்,

பனப்பாக்கம், தென்மாம்பாக்கம், பிள்ளைப்பாக்கம், ஜாகீர்தண்டலம், மேல்வேண்பாக்கம், கீழ்வேண்பாக்கம், தென்னல், மேலபுலம்புதூர், பொய்கைநல்லூர், பெரும்புலிபாக்கம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாய வளமிக்க ஊராகும். மேற்கண்ட கிராம மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் வந்தால் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெமிலிக்கும், திருமால்பூர் பகுதிக்கும் கால்நடைகளை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

அருகில் அரசு கால்நடை மருந்தகம் இல்லாத காரணத்தால் சில நேரங்களில் நோய் தொற்று காரணமாக ஆடு, மாடுகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாங்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிக்கு அருகே அரசு கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

ரூ.24 லட்சத்தில்....

அதன் பயனாக பனப்பாக்கத்தை மையமாக கொண்டு பனப்பாக்கம் பேரூராட்சியின் 1-வது வார்டை சேர்ந்த தென்மாம்பாக்கம் கிராமத்தில் 2016-ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில் அரசு கால்நடை மருந்தகம் கட்டப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும் அந்த கால்நடை மருந்தகம் திறக்கப்படாமல் உள்ளது.

விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போட முடியாத காரணத்தால் கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

கோமாரி நோய்

மழைக்காலங்களில் கால்நடைகளை அதிக அளவில் நோய் தாக்குகிறது. இந்த நிலையில் கால்நடை மருந்தகம் மூடப்பட்டுள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தொலைவில் உள்ள ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றனர். தற்போது மாடுகளை கோமாரி நோய் தாக்குகிறது. இந்த நோயால் மாடுகள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றன. அதற்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

விவசாயிகள் ஒரு பக்கம் வேளாண் பயிர் சாகுபடியை பார்த்துக் கொண்டும், மற்றொரு பக்கம் கால்நடைகளை வளர்த்துக்கொண்டும் சிரமப்படுகின்றனர். நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அருகாமையில் மருத்துவமனை வசதி இல்லாததாலும், சிகிச்சைக்காக நெடுந்தூரம் கால்நடைகளை கொண்டு செல்ல முடியாததாலும், அதனை சிலர் அடிமாட்டு விலைக்கு விற்று விடுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தென்மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை திறக்க வேண்டும் என்பது கிராம விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story