தவறான அறிவிப்பால் பயணிகள் மறியல் துறைமுக, மெயின் வழித்தடத்தில் ரெயில்சேவை பாதிப்பு


தவறான அறிவிப்பால் பயணிகள் மறியல் துறைமுக, மெயின் வழித்தடத்தில் ரெயில்சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2017 3:00 AM IST (Updated: 20 Dec 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

துறைமுக வழித்தடத்தில் தவறான அறிவிப்பால் பயணிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர், மெயின் வழித்தடத்தில் தண்டவாள விரிசல் ஏற்பட்டது.

மும்பை,

துறைமுக வழித்தடத்தில் தவறான அறிவிப்பால் பயணிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர், மெயின் வழித்தடத்தில் தண்டவாள விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு வழித்தடங்களிலும் ரெயில்சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரெயில்சேவை பாதிப்பு

மும்பையில் மின்சார ரெயில்சேவை பொது மக்களின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. தினமும் சராசரியாக 75 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு, தண்டவாள விரிசல் போன்ற காரணங்களால் ரெயில்சேவை பாதிக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் வடலா ரெயில் நிலையத்திற்கு வந்த போது, அந்த ரெயில் பாந்திரா நோக்கி செல்லும் ரெயில் என அறிவிப்பு வெளியானது.

உடனே அந்த ரெயிலில் ஏறியிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள். மேலும் பாந்திரா நோக்கி செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறினார்கள்.

இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த ரெயில் பாந்திரா செல்லும் வழித்தடத்தில் செல்லாமல் பன்வெல் செல்லும் மார்க்கத்தில் உள்ள ஜி.டி.பி. நகர் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள்.

பயணிகள் மறியல்

மேலும் தண்டவாளத்தில் இறங்கி அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தினார்கள். வடலா ரெயில் நிலையத்தில் பன்வெல் செல்லும் அந்த ரெயிலை பாந்திரா செல்லும் ரெயில் என தவறாக அறிவித்ததே பயணிகளின் குழப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.

பின்னர் பயணிகள் அனைவரும் ஜி.டி.பி. ரெயில் நிலையத்தில் இருந்து மீண்டும் வடலா வந்தனர். அந்த ரெயில் பன்வெல் நோக்கி சென்றது. இந்த சம்பவத்தால் துறைமுக வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

தண்டவாள விரிசல்

முன்னதாக காலை 8.30 மணியளவில் துறைமுக வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட்டது. இதேபோல மெயின் வழித்தடத்தில் கல்யாண் – கசாரா செக்‌ஷனில் தண்டவாள விரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று காலை நேரத்தில் மத்திய ரெயில்வேயின் துறைமுக மற்றும் மெயின் வழித்தடத்தில் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

இதனால் ரெயில்கள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. கால்வைக்க முடியாத அளவிற்கு கூட்டநெரிசல் இருந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘துறைமுக வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறு சில நிமிடங்களில் சரிசெய்யப்பட்டது. மெயின் வழித்தடத்தில் தண்டவாள விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாள விரிசலும் சரிசெய்யப்பட்டு 40 நிமிடங்களுக்கு பிறகு அந்த வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன ’’ என்றார்.


Next Story