சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஏக்நாத் கட்சே மேஜையை தட்டி வரவேற்ற எதிர்கட்சியினர்


சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஏக்நாத் கட்சே  மேஜையை தட்டி வரவேற்ற எதிர்கட்சியினர்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:15 AM IST (Updated: 20 Dec 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஆளும் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

மும்பை,

ஆளும் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவரது பேச்சை வரவேற்று எதிர்கட்சியினர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஊழல் புகாரில் பதவி இழந்தார்

மராட்டியத்தில் 2014–ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றிய போது முதல் – மந்திரிக்கான போட்டியில் இருந்தவர் ஏக்நாத் கட்சே. ஆனால் அப்போது முதல் – மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். எனினும் பா.ஜனதாவின் மூத்த தலைவரான இவருக்கு வருவாய் மற்றும் வேளாண் துறை வழங்கப்பட்டது. பின்னா எழுந்த ஊழல் புகார் காரணமாக இவர் தனது மந்திரி பதவியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.

தற்போது மராட்டியத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் கேள்வி நேரத்தின் போது, காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல் – மந்திரி பிரதிவிராஜ் சவான், கோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனத்தில் ரூ.150 கோடி மதிப்பிற்கு மேலான திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டதாக கூறினார்.

குற்றச்சாட்டுகளை அடுக்கினார்

அப்போது அவருடன் ஆளும்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேவும் சேர்ந்து கொண்டார். அவர் மருந்து நிறுவன விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அரசு ஊழல் செய்தவர்களை காப்பாற்றுவது ஏன்? என ஆவேசமாக பேசினார். மேலும் அவர் அரசு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்கப்படாததால் அவர்கள் வேலைவிட்டு செல்கின்றனர் என்றார்.

இதேபோல அவர் மாநிலத்தில் போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாதது, ஜல்காவில் விவசாயிகளுக்கு தேவையான பம்புகளை முறையாக வினியோகம் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவரின் பேச்சை வரவேற்ற எதிர்கட்சியினர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.


Next Story