நெல்லை சிவன் கோவில்களில் சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாடு


நெல்லை சிவன் கோவில்களில் சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Dec 2017 3:19 AM IST (Updated: 21 Dec 2017 10:45 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் உள்ள சிவன் கோவில்களில் சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. சீவலப்பேரி துர்காம்பிகா கோவிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

நெல்லை,

சனிபகவான் நேற்று விருச்சிகராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். 2½ வருடத்திற்கு ஒருமுறை சனி பெயர்ச்சி நடைபெறும். இந்த சனிபெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலான, நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், நவகிரக ஹோமமும், காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை 9.30 மணிக்கு சனிபகவானுக்கு சிறப்பு யாகமும், மூலமந்திர ஹோமமும், 16 வகையான சிறப்பு அபிஷேகமும் நடந்தது. காலை 9.50 மணிக்கு சனி பெயர்ச்சி பரிகார ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லை டவுன் தொண்டர்நயினார் கோவிலில் சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும், கோமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

நெல்லையை அடுத்த சீவலப்பேரி துர்காம்பிகா கோவில் வளாகத்தில் சனிபகவான், தனது மனைவி நீலாதேவியுடன் காட்சி அளிக்கும் தனிக்கோவில் உள்ளது. இங்கு சனிபெயர்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், நவகிரக ஹோமமும், சுதர்சன ஹோமமும், சனிபகவானுக்கு சிறப்பு யாகமும், சனிஈசுவர மூலமந்திர ஹோமமும் நடந்தது.

இதை தொடர்ந்து சனிபகவானுக்கும், நீலாதேவிக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு மேல் சனிபெயர்ச்சி பரிகார சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவானை வழிபட்டு சென்றனர். காலை முதல் மாலை வரை கோவிலில் அன்னதானம் நடந்தது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் இருந்து சீவலப்பேரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story