பாவூர்சத்திரத்தில் மோட்டார்சைக்கிள் விபத்தில் கார் மெக்கானிக் பலி
பாவூர்சத்திரம் அருகே நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் கார் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம்,
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முப்புலியூர் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தென்காசி– அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள மத்தளம்பாறையில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை அவர் தனது நண்பர் கணேசனுடன், ஒரு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு பெயிண்ட் வாங்குவதற்காக பாவூர்சத்திரம் நோக்கி வந்தார். செல்வவிநாயகபுரம் விலக்கு அருகில் வந்த போது, முன்னால் சென்ற சிவநாடானூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது அவரது மோட்டார்சைக்கிள் மோதியதாம்.
இதில் கீழே விழுந்த சதீஷ்குமார் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சதீஷ்குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மைனர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.