தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு


தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Dec 2017 3:56 AM IST (Updated: 20 Dec 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

சனிப்பெயர்ச்சியையொட்டி தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் உள்ள சனீசுவரர் சன்னதியில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, நவக்கிரகஹோமம், சனிபகவான் அபிஷேகம், 11 மணிக்கு கும்பாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் ராசிக்கு ஏற்ப அர்ச்சனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பிரத்தியங்கிராதேவி ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தன. 11 மணிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் சனீசுவரருக்கு பிரத்யேக கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்தன. 10 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனீசுவரரை வழிபட்டனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, சிறப்பு அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி நடந்தது. காலையில் கணபதி ஹோமம், சனிப்பெயர்ச்சி பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து சுவாமி– அம்பாளுக்கு 21 வகையான அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேசுவரி அம்பாள் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவில், அகிலாண்ட ஈசுவரி அம்மன் சமேத கோதண்டராமேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சனீசுவர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story