பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 23,872 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்


பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 23,872 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:00 AM IST (Updated: 20 Dec 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

பிசான சாகுபடிக்காக, மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 872 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அம்பை,

பிசான சாகுபடிக்காக, மணிமுத்தாறு அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 872 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் சரிவடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதில் மணிமுத்தாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 113.45 அடியாகும். ஏற்கனவே விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழையின் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து மழையும் குறைந்தது.

இந்த நிலையில் பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கலெக்டர் திறந்து வைத்தார்


அணை திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு அணையின் ஷட்டரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் உத்தரவுப்படி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 445 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 31.3.2018 வரை தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 23 ஆயிரத்து 872 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் பாதை மோசமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. அது ஒப்புதலாகி வந்ததும் சாலை புதுப்பித்து தரப்படும். மேலும் மணிமுத்தாறு அருவியின் கைப்பிடி சுவர்களும் புதுப்பிக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநில கோட்ட என்ஜினீயர் ரவி, செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார், பழனிவேல், அம்பை தாசில்தார்(பொறுப்பு) பார்கவி தங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story