மார்கழி மாதம் பிறப்பு எதிரொலியால் அசைவத்துக்கு மாறிய மீன் பிரியர்கள் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது


மார்கழி மாதம் பிறப்பு எதிரொலியால் அசைவத்துக்கு மாறிய மீன் பிரியர்கள்  திசையன்விளை மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 21 Dec 2017 2:45 AM IST (Updated: 20 Dec 2017 11:57 PM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்கிச் செல்ல கூட்டம் அலைமோதியது.

திசையன்விளை,

கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்கிச் செல்ல கூட்டம் அலைமோதியது.

மீன் விற்பனை

கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் விரதம் கடைபிடிப்பார்கள். இதனால் கார்த்திகை மாதத்தில் மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி வகைகள் விற்பனை குறைவாக இருக்கும். இந்த ஆண்டு ஒகி புயல் காரணமாக 15 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் மீன் விலை குறைவாகவே இருந்தது. கடந்த வாரம் சாளை ரக மீன்கள் ரூ.10–க்கு 20 முதல் 25 எண்ணம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இதே போல் மற்ற ரக மீன்களும் விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வந்தது. விற்பனையாகாத மீன்களை கருவாடாக பதப்படுத்தி வந்தனர்.

கூட்டம் அலைமோதியது

கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், சைவத்துக்கு மாறியிருந்த அசைவ பிரியர்கள் தங்கள் விரதத்தை துறந்து மீண்டும் அசைவத்துக்கு மாறியுள்ளனர். இதனால் திசையன்விளை மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்கிச் செல்ல கூட்டம் அலைமோதியது. மீன் விலையும் கார்த்திகை மாதத்தை விட மூன்று மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

ரூ.10–க்கு 20 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்ட சாளை ரக மீன்கள் நேற்று 10 ரூபாய்க்கு 7 மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் மற்ற ரக மீன்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட் நடைபாதையில் வைத்து மீன்கள் விற்பனை செய்ததால் மீன் மார்க்கெட்டுக்குள் சென்று மீன்களை வாங்கி செல்ல பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.


Next Story