ஆலங்குளத்தில் வீட்டை மீட்டுத்தரக்கோரி தையல்காரர் குடும்பத்துடன் சாலைமறியல் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆலங்குளத்தில் வீட்டை மீட்டுத்தரக்கோரி, தையல்காரர் குடும்பத்துடன் சாலைமறியல் செய்தார். அப்போது திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் வீட்டை மீட்டுத்தரக்கோரி, தையல்காரர் குடும்பத்துடன் சாலைமறியல் செய்தார். அப்போது திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கந்துவட்டி ஒழிப்பு முகாமில் புகார் மனுநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது 45). தையல்காரர். இவர் கடந்த மாதம் ஆலங்குளத்தில் நடந்த கந்துவட்டி ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு, தான் கந்துவட்டி கொடுமையால் அவதிப்படுவதாக இன்ஸ்பெக்டர் அய்யப்பனிடம் புகார் மனு அளித்தார்.
அந்த புகாரில், கடந்த 2012–ம் ஆண்டு நெட்டூர் வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி பேச்சித்தாய் என்பவரிடம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கினேன். அதற்கு தனது வீட்டை அடமான பத்திரம் கொடுத்து, கடன் வாங்கிய பணத்துக்கு இதுநாள் வரை ரூ.4½ லட்சம் பணம் கொடுத்துள்ளேன். மேலும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தந்தால் பத்திரத்தை திருப்பி கொடுத்து விடுவதாக பேச்சித்தாய் கூறினார். பின்னர் அந்த பத்திரத்தை மறுஅடமானம் செய்து கூடுதல் பணம் பெற்று அவரிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டி பத்திரத்தில் வில்லங்க சான்று பார்க்கும் போது, பத்திரம் அடமானம் போடப்படாமல் கிரயம் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுசம்பந்தமாக பேச்சித்தாயிடம் கேட்டதற்கு ரூ.2 லட்சத்து 30 லட்சத்தை தந்தால் பத்திரத்தை பெயர் மாற்றி தருகிறேன் என்று கூறுகிறார். எனக்கு தெரியாமல் கிரய பத்திரம் போட்டுள்ளனர் என கூறப்பட்டு இருந்தது.
குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சிஇந்த மனு சம்பந்தமாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த மனு மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி மனோகரன் தனது குடும்பத்துடன் ஆலங்குளம் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை சாலைமறியல் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை மனோகர் தன் மீதும், அருகில் இருந்த அவருடைய மனைவி லதா (35), மகன் கணேஷ் பாரதி (17) ஆகியோர் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
அப்போது இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், மனோகரனிடம் தங்கள் மனு குறித்து விசாரணை நடத்தியதில் 2012–ம் ஆண்டு வீடு கிரயப் பத்திரம் போட்டு பணம் கொடுக்கப்பட்டதாக பத்திரத்தை ஆதாரமாக வைத்துள்ளனர். மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனவே இந்த பிரச்சினை சம்பந்தமாக நீங்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு செய்து கொள்ள வேண்டும். தீர்ப்பின் தன்மையை பொறுத்தே போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இதுபோன்ற தவறான விபரீதமான முடிவு எடுக்க வேண்டாம் எனக்கூறி அனுப்பி வைத்தார்.