ராமேசுவரத்தில் வேனில் திடீரென தீ பற்றி எரிந்தது ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்பளி துணிகள் நாசம்


ராமேசுவரத்தில் வேனில் திடீரென தீ பற்றி எரிந்தது ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்பளி துணிகள் நாசம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் வேனில் திடீரென தீ பற்றி எரிந்ததில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்பளி ஆடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

ராமேசுவரம்,

தேனி மாவட்டம் கம்பம் யானைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் ஊர் ஊராக சென்று கம்பளி துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வேனில் கம்பளி விற்பனைக்காக ராமேசுவரம் வந்தார்.

வேனை டிரைவர் செல்வம் ஓட்டி உள்ளார். ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அந்த வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியது. உடனே ராஜா மற்றும் டிரைவர் செல்வம் ஆகியோர் வேனில் இருந்து இறங்கி சாலையோரத்தில் தேங்கியிருந்த மழைநீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் கம்பளி துணிகளில் பற்றிய தீ மளமளவென எரியத்தொடங்கியது.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து அந்த வழியாக சென்ற நகராட்சி குடிநீர் லாரியில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் வேனில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான கம்பளி துணிகள் தீயில் எரிந்து நாசமானது. சாலையின் நடுவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story