குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு சோழவந்தானில் பேரூராட்சி அலுவலகத்தை ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சோழவந்தான்,

சோழவந்தான் பேரூராட்சி 5–வது வார்டு பகுதிகளான ஆசிரியர் காலனி, பசும்பொன் நகர், மீனாட்சி நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு வாடிப்பட்டி ரோட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை குடோன் பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தகாரர் மூலம் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு 5 வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது நடந்து வரும் ரெயில்வே பாலம் பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வீஸ் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் பணிகளுக்கு 5–வது வார்டு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து குடியிருப்போர் நலசங்கம் சார்பில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையையும் குடிநீர் வடிகால் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு சோழவந்தானில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய், இளநிலை உதவியாளர் முத்துகுமார், துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 5 வார்டு பகுதிகளில் உள்ள மெயின் ரோட்டில் தற்காலிக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story