ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீரான குடிநீர் வழங்க கோரிக்கை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீரான குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

சீரான குடிநீர் வழங்கக்கோரி எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலச்சிபாளையம்,

எலச்சிபாளையம் அருகே உள்ள அகரம் கிராமம் சந்தைப்பேட்டை பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விசைத்தறி தொழில் அதிகம் நடைபெறும். இந்த பகுதியில் பல மாதங்களாக சீரான குடிநீர் கிடைக்கவில்லை. 3 மாதத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. மேலும் காவிரி நீரும், உப்பு நீரும் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

மேலும் மாதம் ஒரு குடும்பத்திற்கு குடிநீரை விலைக்கு வாங்க ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் நிலை இருந்து வருவதாகவும், சீரான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷிடம், தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தனர். அப்போது அதிகாரிகள் தரப்பில் சரியான பதில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து சீரான குடிநீர் வழங்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள். இதன் பின்னர் பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் கட்சியின் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் சத்தியாநகர் கிளை செயலாளர் ரவி, ராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story