ஆண்டிப்பட்டி அருகே திருமணமான ஒரு வாரத்தில் என்ஜினீயர் மர்மச்சாவு
ஆண்டிப்பட்டி அருகே திருமணமான ஒரு வாரத்தில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெற்கு மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் ராசு. அவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). என்ஜினீயரான இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். பின்னர் அந்த வேலையை விட்டு, விட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கும், க.விலக்கு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு ராஜ்குமார் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதற்கிடையே நேற்று மதியம் டி.புதூர் அருகே உள்ள நாகமலை மலையடிவாரத்தில் ரத்த காயங்களுடன் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்து ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து மலையடிவாரத்தில் வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமணமான ஒரே வாரத்தில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.