குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் மணல் அள்ளுவதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம், 3 கிராம மக்கள் மனு
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் மணல் அள்ளுவதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று 3 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள மாம்பாறை, வடுகபட்டி, அத்தப்பன்பட்டி ஆகிய 3 கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, எல்லப்பட்டியில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று கோரி, அவர்கள் மனு கொடுத்தனர். அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
கிராம மக்கள் கொடுத்த மனுவில், எல்லப்பட்டி கிராமத்தில் சிலருக்கு, அரசு சார்பில் விவசாய நிலம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிலம் மணல் நிறைந்த பகுதியாக இருந்தது. இந்த நிலையில் ஒருசிலர் சேர்ந்து, அந்த நிலத்தை வாங்கி விட்டனர். பின்னர் அந்த நிலத்தில் இருந்து மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டத்துக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது.
மணல் அள்ளப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, அத்தப்பன்பட்டி, மாம்பாறை, வடுகபட்டி, கணவாய்பட்டி, துறையூர், அண்ணாநகர், நரசிங்கபுரம், அய்யம்பாளையம் உள்பட 13 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பத்தினர் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதனை கடந்த மாதம் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். இதுபற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் 13 கிராமங்களை சேர்ந்த மக்களும் தர்ணா போராட்டம் நடத்துவோம், என்று கூறப்பட்டுள்ளது.