தாசில்தார் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 100 பேர் கைது


தாசில்தார் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 100 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான (சி.ஐ.டி.யூ.) கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த மறியல் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் ராமலிங்கம், நகர அமைப்பாளர் பாலு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பாண்டியன், பொறியாளர் சங்க மாநில துணை தலைவர் செல்வன், மாநில குழு உறுப்பினர் செல்வகணபதி, பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் சண்முகம் ஆகியோர் பேசினர். வேலையிழந்த கட்டுமான தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் மணல் இறக்குமதி செய்து குறைந்த விலையில் வழங்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதை அரசே தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அணைகளில் நீரில்லா காலங்களில் அதில் கிடைக்கும் மணலை எடுத்து வினியோகம் செய்ய வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு மணல் குவாரிகளை அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை, திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல திருவாரூர் பஸ் நிலையம் அருகில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மண்டல தலைவர் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பழனிவேல், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் அனிபா ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய அமைப்பாளர் தர்மேந்திரன், நகர செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன், நகர பொருளாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாரூர் பழைய ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story