ஊட்டியில் 30–ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 19 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்


ஊட்டியில் 30–ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 19 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:00 AM IST (Updated: 21 Dec 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 30–ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.81 கோடி மதிப்பில் 19 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

ஊட்டி,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குதிரை பந்தய மைதானத்தில் வருகிற 30–ந் தேதி நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி, குதிரைபந்தய மைதானத்தில் மேடை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழாவுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

ஊட்டியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, நகராட்சி சார்பில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. எட்டின்ஸ் சாலை, ஹில்பங்க் சாலை, ஊட்டி மத்திய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள சாலை, கூட்ஷெட் சாலை, தமிழக மாளிகை செல்லும் சாலை ஆகிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது போல் குண்டும் குழியுமான சில ரோடுகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:–

ஊட்டியில் வருகிற 30–ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், பராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 11 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது.

விழாவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 19 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.81 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இதில் ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்கள் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விழாவையொட்டி, 13 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கூடலூர் பகுதியில் 8 கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஆவின் நிறுவனம் பாலை கொள்முதல் செய்து, ஆதிவாசிகளுக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருகிறவர்களின் வாகனங்களை குதிரை பந்தய மைதானம், காந்தி விளையாட்டு மைதானம் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

அஜ்ஜூர் கிராமத்தில் 3 புல எண்களில் வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மக்களை கிராமத்தை விட்டு வெளியேற்றாமல், அவர்களுக்கு நிலம் சம்பந்தமான பதிவு வழங்கவும், அவர்கள் அங்கேயே விவசாயம் செய்யவும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. இதற்காக தனி கிராமக்குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story