கோவை கிராஸ்கட் ரோட்டில் அதிவேகமாக சென்ற கார் மோதி வாலிபர் சாவு
கோவை கிராஸ்கட் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஒரு கார் நிற்காமல் சென்றது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கோவை,
கோவை காந்திபுரம் விவேகானந்தா ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது34). இவர் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். சாப்பாடு வாங்குவதற்காக ஓட்டலுக்கு சென்றுவிட்டு இரவில் ஸ்டூடியோவுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு தப்பிச்சென்ற காரை தேடி வருகிறார்கள்.
விபத்து நடந்த பகுதியையொட்டி ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:–
தங்கராஜ் மீது மோதிய கார் எது? என்று விசாரணை நடத்தி வருகிறோம். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் சரியாக தெரியவில்லை. அந்த வாகனம் பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தங்கராஜ் சாவுக்கு காரணமாக இருந்த கார் எந்த வழியாக சென்றிருக்கலாம்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.