சுலப தவணையில் வீடு கட்டித்தருவதாக மோசடி ரியல் எஸ்டேட் உரிமையாளரை பிடித்து போலீஸ் விசாரணை
சுலப தவணையில் வீடு கட்டித்தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், ரியல் எஸ்டேட் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரன்(வயது 42). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவர் சுலப தவணையில் வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடம் பணம் வசூல் செய்தார். கோவை காளம்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் இவரிடம் வீடு கட்ட பணம் செலுத்தினார்கள்.
கோவை சிறுவாணி நகரை சேர்ந்த கீதாமணி(42) என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணம் வசூலித்துள்ளார். ஜெகதீஷ்வரன் காண்பித்த இடத்தில் பூமி பூஜை போட சென்றார். அப்போது அந்த இடம் வேறு நபருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கீதாமணி பேரூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் ஏராளமானவர்கள் போலீஸ் நிலையத்துக்கு புகார் செய்ய படை எடுக்கத்தொடங்கினார்கள். நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் வந்து புகார் மனு அளித்தனர்.
இந்தநிலையில் ஜெகதீஷ்வரன், நேற்று முன்தினம் பேரூர் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது, இதுதொடர்பான தகராறில் ஒரு வாலிபர் அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் மீது பலர் புகார் செய்ததை தொடர்ந்து, சிகிச்சைக்கு பின்னர் அவரை போலீசார் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
ஏராளமானவர்களிடம் ரூ.1½ கோடிக்கும் மேல் ஜெகதீஷ்வரன் மோசடி செய்து இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சுலப தவணையில் வீடு கட்டுவதாக கூறி மோசடி செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.