மீன்பிடி சாதனங்கள் விற்பனை செய்யும் கடை தீயில் எரிந்து நாசம் தீ வைத்ததாக போலீசில் புகார்


மீன்பிடி சாதனங்கள் விற்பனை செய்யும் கடை தீயில் எரிந்து நாசம் தீ வைத்ததாக போலீசில் புகார்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே மீன்பிடி சாதனங்கள் விற்பனை செய்யும் கடை தீயில் எரிந்து நாசமடைந்தது. இதில் ரூ.20 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. மர்மநபர்கள் கடையின் ஜன்னலை உடைத்து தீ வைத்ததாக கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே வாணகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிசெல்வன் (வயது 48). இவர், வாணகிரி கிராமத்தின் தலைவராக உள்ளார். மேலும் தருமகுளம் கடைவீதியில் மீன்பிடி சாதனங்களான வலை, கயிறு, துடுப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வெற்றிசெல்வன் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று அதிகாலை திடீரென கடை தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட புகையால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், கடையில் இருந்த மீன்பிடி சாதனங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகின. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால் மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட அந்தபகுதி மக்கள், பூம்புகார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீராலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் எரிந்து சாம்பலானது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெற்றிசெல்வன், பூம்புகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கவிதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீப்பிடித்து எரிந்த கடையை போலீசார் பார்வையிட்டனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் சுரேஷ் தடயங்களை பதிவு செய்தார். 

Next Story