கார்த்திகை தீப விழா நிறைவடைந்ததை தொடர்ந்து அண்ணாமலையார் மலையில் பிராயசித்த பூஜை, அபிஷேகம்


கார்த்திகை தீப விழா நிறைவடைந்ததை தொடர்ந்து அண்ணாமலையார் மலையில் பிராயசித்த பூஜை, அபிஷேகம்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் கார்த்திகை தீபம் நிறைவடைந்த நிலையில் அண்ணாமலையார் பாதத்துக்கு பிராயசித்த பூஜை நடத்தப்பட்டு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கடந்த 2-ந் தேதியன்று 2, 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீப தரிசனத்தை காண வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.

தீபம் ஏற்றப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சென்று மகாதீப தரிசனத்தை பார்த்து விட்டு கீழே இறங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மகா தீபத்தின் போது மலையேற தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பக்தர்கள் மலையில் ஏறி, இறங்கியதற்கு புனிதநீரை கொண்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பிராயசித்த பூஜை, அபிஷேகம் போன்றவை தீபத்திருவிழா முடிந்த சில நாட்களில் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்தது. இதையொட்டி புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் தீபதரிசனத்தை காண மலைக்கு ஏறி சென்ற இடத்தில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளதால் பிராயசித்த பூஜை செய்யப்பட்டு, புனித நீரை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெகனாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story