தாராபுரம் அருகே மரத்தின் மீது வேன் மோதல்; நூற்பாலை ஊழியர்கள் 12 பேர் படுகாயம்


தாராபுரம் அருகே மரத்தின் மீது வேன் மோதல்; நூற்பாலை ஊழியர்கள் 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த நூற்பாலை ஊழியர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாராபுரம்,

தாராபுரம்–திருப்பூர் சாலையில் குண்டடம் பிரிவு அருகே ஆர்.ஆர்.டி. டெக்ஸ் என்கிற தனியாருக்கு சொந்தமான நூற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பு ஆலையில் வேலை செய்த ஊழியர்களில் 20 பேர், நேற்று மாலை வேலை முடிந்ததும் நூற்பு ஆலைக்கு சொந்தமான வேன் ஒன்றில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

வேன் தாராபுரத்தை கடந்து அலங்கியம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, சீத்தக்காடு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மில் ஊழியர்களான, திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா மானூரை சேர்ந்த நாகராஜன் மனைவி லட்சுமி (வயது 43), பாஸ்கரன் மனைவி மகுடீஸ்வரி (50), பிச்சைமுத்து மனைவி மாரியாத்தாள் (37), நெய்க்காரபட்டியை சேர்ந்த மதனபூபதி என்பவரின் மனைவி பத்ரா (30), பழனியை சேர்ந்த கருப்புச்சாமி (28) மற்றும் அய்யப்பன், கவிதா, சுதா, நாகதேவன் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக லட்சுமி, மகுடீஸ்வரி, மாரியாத்தாள், பத்ரா மற்றும் கருப்புசாமி ஆகிய 5 பேர் மட்டும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story