ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சரஸ்வதி கலந்து கொண்டு பேசினார்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 1–1–2016 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை மற்றும் பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்பு சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, கூட்டுறவு சொசைட்டி மாநில பொருளாளர் கோவிந்தராஜ், அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் செல்வி, வட்ட செயலாளர்கள் பாஸ்கரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மோகனா நன்றி கூறினார்.