1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் கர்நாடகத்தில் மின்வெட்டு கிடையாது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்றும், கர்நாடகத்தில் இனிமேல் மின்வெட்டு என்பதே கிடையாது என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்றும், கர்நாடகத்தில் இனிமேல் மின்வெட்டு என்பதே கிடையாது என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
10 லட்சம் டன் நிலக்கரிகர்நாடகத்தில் அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி பிரச்சினை அதிகமாக உள்ளது. நமக்கு 10 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. நிலக்கரி ஒதுக்குமாறு, சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரும் சொன்னார். ஆனால் இதுவரை நமக்கு நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
நாடு முழுவதும் நிலக்கரி பிரச்சினை இருக்கிறது. ஆனால் சில மாநிலங்களுக்கு நிலக்கரியை மத்திய அரசு வழங்குகிறது. கர்நாடகத்திற்கு மட்டும் நிலக்கரி ஒதுக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஷராவதி அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது.
மின்வெட்டு கிடையாதுதற்போது 1,000 மெகாவாட் மின்சாரம் யூனிட் 4 ரூபாய் 8 பைசா என்ற அளவில் கொள்முதல் செய்கிறோம். அதனால் கர்நாடகத்தில் இனிமேல் மின்வெட்டு என்பது கிடையாது. அடுத்த கோடை காலம் வரை மின்வெட்டுக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த ஆண்டு(2018) தேர்தல் நடைபெற உள்ளது. ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. அதனால் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகம் செய்வோம். இதில் எந்த தடையும் இருக்காது.
யூனிட் 2 ரூபாய் 50 பைசாவுக்கு மின்சாரத்தை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக எடியூரப்பா சொல்கிறார். அந்த மின்சாரத்தை கொள்முதல் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இதுபற்றி எடியூரப்பாவுக்கு நான் கடிதம் எழுதினேன். அரசியலுக்காக அவர் இவ்வாறு பேசுகிறார். மத்திய அரசு கர்நாடகம் வழியாக அண்டை மாநிலத்திற்கு மின்சாரத்தை வழங்குகிறது. அதற்கு மின்பாதை அமைத்து கொடுப்பதில் நமக்கு ரூ.700 கோடி செலவாகிறது.
சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காஇதில் ஒரு தொகையை அண்டை மாநிலத்திடம் இருந்து பெற்று கொடுக்குமாறு மத்திய மின்சாரத்துறை மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதிமொழி அளித்துள்ளார். ஜனவரி 19–ந் தேதி துமகூருவில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவின் சேவை தொடங்க உள்ளது. பெங்களூருவில் புதிதாக 4 மாதிரி துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. வருகிற 24–ந் தேதி மின் மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.